
posted 4th July 2022
புனித செபஸ்தியார் தேவாலய ஆடித்திருவிழா
வடமராச்சி கிழக்கு பிரதேசத்திலுள்ள கத்தோலிக்க யாத்திரைத் தலமான புல்லாவெளி புனித செபஸ்தியார் தேவாலய ஆடித்திருவிழா எதிர்வரும் 07 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருவிழா திருப்பலியுடன் பெருநாள் நிறைவடையும்.
பெருநாளையொட்டி தேவாலய வளாகத்தை துப்பரவு செய்து பக்தர்களுக்கு குடி தண்ணீர் வசதிகளை வழங்க பருத்தித்துறை பிரதேச சபை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பதுக்கி வைக்கப்பட்ட எரிபொருட்களை கைபற்றும் வேட்டை தொடர்கின்றது
அளவெட்டியில் பதுக்கி வைக்கப்பட்ட 291 லீற்றர் டீசல் தெல்லிப்பழைப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக் கிழமை (03) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
அந்தப் பகுதியில் அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக தெல்லிப்பழைப் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அந்த இடம் முற்றுகையிடப்பட்டது.
இதன்போது அங்கு விற்பனைக்கு தயாராக இருந்த சுமார் 70 லீற்றர் டீசலையும், ஏற்கனவே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு பரல் டீசலையும் பொலிஸார் கைப்பற்றினர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அருள்மிகு ஸ்ரீமுனீஸ்வர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப்பெருவிழா
யாழ்ப்பாணம் கோட்டை அருள்மிகு ஸ்ரீமுனீஸ்வர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப்பெருவிழா கடந்த வியாழக்கிழமை மாலை 04 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியுள்ளது.
தொடர்ந்து 28 தினங்கள் அலங்கார உற்சவம் இடம்பெறும். இதில் எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சப்பறத் திருவிழாவும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 1008 சங்காபிஷேகமும் மாலை 5.30 மணிக்கு இரத பலியும் மறுநாளான 25 ஆம் திகதி திங்கட்கிழமை பகல் 10 மணிக்கு குதிர்த்த உற்சவமும் இடம் பெறுவதுடன் வருடாந்த அலங்கார உற்சவம் நிறைவுபெறும்.
அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 51 பேர் கைது
திருகோணமலை கடற்பரப்பில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை (03) அதிகாலை திருகோணமலை அலர் தோட்டம் கடற்கரையிலிருந்து 12 கிலோமீற்றர் தூரத்தில் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கம்பஹா மற்றும் இரத்தினபுரி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
கைதானவர்களில், 41 ஆண்கள், 5 பெண்கள், ஐந்து சிறுவர்கள் இருந்தனர். இவர்கள் அனைவரும் திருகோணமலை கடற்படை முகாமுக்கு விசாரணைகளுக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்று அறிய வருகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கடற்படையினரின் விசாரணைகளுக்கு பின்னர் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)